இனி(ணை)ய நண்பர்களே,
வணக்கம்..!
"வெகுநாட்களாக, என் மனதில் தோன்றும் எண்ணங்களை மக்களிடம் பகிர்ந்துகொள்ள ஒரு Blog தொடங்கவேண்டும் என்ற ஆசை இருந்தது" என்று பொய் சொல்ல விரும்பவில்லை. நான் முகநூலிலேயே மிகவும் அரிதாய் பதிவு செய்பவன். ட்விட்டர்- தொடங்கியதோடு சரி. அதன்பின் ஒருமுறையும் உள்நுழைந்ததில்லை. எளிமையாகச் சொல்லப்போனால் சமூகத்தை சிறிது தொலைவிலிருந்தே கவனிப்பவன்.
என் Blog தொடக்கம் முற்றிலும் எதிர்பாராததே. நேற்று அடித்த மழைச்சாரலில் இன்று பூத்ததே என் வலைப்பூ..! என் நண்பர் ஒருவரின் வலைப்பூவை படித்தவுடன் அதற்கு பதில் எழுத நினைத்தேன். என் பதில் எழுத எழுத நீட்டித்தது. அப்போது தோன்றியது ஒரு புதிய சிந்தனை..! இவ்வளவு எழுதியதை பதிலாக்குவதற்கு பதில் பதிவாக்கினால் என்ன என்று. இவ்வாறு தோன்றியதே என் "புதிய சிந்தனை..!"
பிறந்தது புதிய சிந்தனை மட்டும் அல்ல, புதுமை வேந்தனும் தான். வெகுநாட்களாக 'நவீன் ராஜ்' ஆகிய என் பெயரை தூய தமிழில் மொழிபெயர்க்கவேண்டும் என்ற ஆசை இருந்தது. (இது பொய்யல்ல. உண்மை..) எனினும், அதைபற்றி சிந்தித்ததில்லை.. ஆனால் நேற்று அவா அதிகமாகி மூளையின் இரசாயன மாற்றங்களுடன் என் சிந்தனைத் துளிகளின் குவிப்பாய் புது உருவெடுத்து பிறந்தான் புதுமை வேந்தன்; பூத்தது புதிய சிந்தனை..!
தன் மனதின் கருத்துகளை கிறுக்கல்களாய் பதிவிக்கவிருக்கும் யதார்தவாதியாகிய நான், இதனை எந்தவித மாபெரும் சமூக புரட்சி அல்லது மாற்றத்திற்காகவோ செய்யவில்லை. ஏனெனில், நான் சுவாமி விவேகானந்தரின் "எதுவரை ஆன்மீக புரட்சி ஏற்பட்டு தனி மனிதன் திருந்தவில்லையோ, அதுவரை சமூக புரட்சிகள் பயனற்றதே!" என்ற கருத்தை பின்பற்றுபவன். இதனையே நம் முன்னோர்கள் எளிமையாக "நாயைக் குளிப்பாட்டி நடுவீட்டில் வைத்தாலும், அது வாலைக் குழைத்துக் கொண்டு குப்பைமேட்டுக்குத் தான் போகும்!" என்று கூறியுள்ளது நாம் அனைவரும் அறிந்ததே.
எந்நேரமும் இணையத்தில் 'யார் என்ன சொல்வான் ? எவனாவது மாட்டுவானா?' என்பதே வேலையாய்க் காத்திருக்கும் எப்போதும் பணிமிகுதியுடைய(?!) நண்பர்களுக்கு: என் பதிவில் இடம்பெறும் கருத்துகளுக்கு நான் மட்டுமே பொறுப்பல்ல. என்னை அவ்வாறு சிந்திக்கவைத்த சமூகமும் சூழல்களும் காரணங்கள் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
மற்றவகையில், என் சிந்தனைகளை மக்களுடன் பகிர்வதில் மிக்க மகிழ்ச்சி. எண்ணங்களை தமிழில் எளிமையாக எழுத வழிவகுத்த Bloggerக்கு நன்றி.
"என் வலைப்பூவில் தேனருந்த வாருங்கள்..!
அதன் மணம் பரப்பி கனியாய் மாற்றுங்கள்..!"
தங்கள் விமர்சனங்களை வரவேற்கிறேன்.
வாழ்க பாரதம்..!
- நவீன் ராஜ்
(இனி, புதுமை வேந்தன்)
No comments:
Post a Comment