Friday, 19 September 2014

நான் டமிலன் அல்ல!!

அன்பார்ந்த தமிழர்களே,
                                                      வணக்கம்..!

(என் முதற்பதிவை வாசித்த பின்னரே இதை வாசிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்)

          நம் தாய்மொழியாகிய தமிழ்மொழி தன்னுள் விண்ணைதொடும் பல சிறப்புகளை பொதித்து வைத்திருந்தாலும், அவை அனைத்திற்கும் மகுடமாய் திகழ்வது 'தமிழ்'இன் உச்சரிப்பே. உலக மொழிகளிலேயே 'எழுத்தின் உச்சரிப்பு கொண்ட ஒரே மொழி நம் தமிழ்மொழியே.
"பேரக் கேட்டாலே சும்மா அதிருதுள்ள!
என்பதுபோல் பெயரிலேயே தன் பெருமையை உலகிற்கு பறைசாற்றும் மொழியானது தமிழ்மொழி.
          ஆகா..! இத்தகைய தமிழின் 'ழ'வை எழுதுவதில் தான் எத்தனை சுகம். 'ம' வரைந்து, அதன் கீழிருந்து கையெடுக்காமல் வலப்பக்கமாய் நீட்டித்து, அதை அப்படியே பின்திருப்பி கீழ்ப்பக்கமாய்ச் சென்று, பின்னர் இடப்பக்கத்தில் மேலெழும்பி ஓர் அரை சுழியோடு முடியும் இந்த 'ழ', சிறுவயதில் நாம் ஆடிய ஊஞ்சலை அல்லவா நினைவுறுத்துகிறது. 
          தமிழை தமிழர்களே தவறாக உச்சரித்த காலம் இன்று பெரும்பாலும் மாறியுள்ளது என்பது மகிழ்ச்சிக்குரிய செய்தி. தங்கிலிஷிலும் (தமிழை அப்படிய ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தல்) தமிழை 'Thamizh' என எழுதும் பழக்கம் வந்துள்ளது (எ.கா.: Wikipediaவில் Thamizh Naadu Arasu என மொழிபெயர்ப்பு). ஆனால் ஆங்கிலத்தில் மட்டும் தமிழை Thamizh என எழுத முடிந்தும் ஏன் இன்னும் டமில் (Tamil) என்றே பயன்படுத்துகிறோம்? 
         கூட்டத்தோடு இருப்பவனை கும்பிட்டு, தனிமையில் இருப்பவனை தண்ணி தெளித்து விடும் இவ்வுலகிற்கு, தந்நிகரற்ற ஒரே எழுத்தாகிய 'ழ'வின் பெருமையை உணர்த்த, அதனை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். 
          அக்காலத்தில் ஆங்கிலேயனின் வாயில் நுழையாத காரணத்தால் நம் நாட்டின் பல சொற்கள் இந்திய அரசியல் சாசனத்தில் தவறாக இடம் பெற்றன. அவற்றின் வரிசையில் தமிழும் ஒன்று. தவறுகள் பொதுவானவை. ஆனால் அவற்றை திருத்திக்கொள்ளுதல் நன்றல்லவோ. வரலாற்றை ஆராய்ந்தால் இவ்வாறு பல திருத்தங்கள் நடந்தேறியுள்ளன என்பது தெரிகின்றது. சமீபத்தில் ஒரிசா ஒடிஷாவாக மாறியதை பலர் அறிந்திருப்பீர்கள்.
          முந்தைய ஒரிசா மாநில மக்கள் அதனை காலம் காலமாக ஒடிஷா என்றும், தம் மொழியை ஒடியா என்றுமே இன்றுவரை அழைத்து வருகின்றனர். ஆனால் இடையில், ஆங்கிலேயனுக்கு 'டி' வராத காரணத்தால் (?!!! பின்பு 'D' for Dog எங்கிருந்து வந்தது?!?! ஹ்ம்ம்.. ஆங்கிலேயன் நினைத்தால் எதையும் மாற்றலாம் போல..) அதை 'ரி' ஆக்கி, மாநிலத்தை ஒரிசா என்றும், மொழியை ஒரியா என்றும் மாற்றிவிட்டான். அவ்வாறே அரசியல் சாசனத்திலும் தவறாக இடம்பெற்றுவிட்டது. தற்போது பெரும் போராட்டத்திற்குப் பின் ஒடிய மக்கள் அரசியல் சாசனத்தில் பெயர்திருத்தம் செய்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதுவரை, ஒடிய மக்களைத் தவிர மற்றவர்கள் (நானும் தான்) அதனை ஒரிசா என்றே தவறாக அழைத்துக்கொண்டிருந்தது வருந்தற்குரிய செய்தி!
          இப்பொழுது கொஞ்சம் நம் டமிலின்... மன்னிக்கவும்... தமிழின் நிலையை சிந்தித்துப் பார்க்கவும். யதார்த்தப்பார்வையில், செம்மொழியாகிய நம் தமிழ்மொழி தமிழகத்தை தவிர இவ்வுலகின் மற்ற பகுதிகளில் டமிலாய் வாழ்கிறது என்பதே நிதர்சனமான உண்மை.
          நம் தாய்த்தமிழ்மொழியை அதன் வழிமொழிகளோடு இணைத்து "உள்நாட்டு மொழிகள்" என்று வகைப்படுத்தியபோது தூங்கிகொண்டிருந்த தமிழர்களே..! இப்போதாவது விழியுங்கள். நம் பெயரை தவறாக உச்சரித்தால் கோபப்படும் நாம், நம் தாய்மொழி தவறாக உச்சரிக்கப்படுவதை கண்டும் ஏன் காணாதவாறு இருக்கிறோம்???
          ஆளும் மொழி ஆங்கிலமாய் உள்ளதால் அதனை பயன்படுத்திக்கொள்ள முயல்வோம். எப்போது ஆங்கிலத்தில் Tamil - Thamizh ஆக மாறுகிறதோ, அப்போதுதான் மற்ற மொழியினர்களும் தமிழை சரியாக உச்சரிப்பர். 'ழ'வின் சிறப்பும் உலகமயமாகும். இது பெயர்மாற்றம் அல்ல, பெயர்த்திருத்தம்.
          ஒரு யதார்த்தவாதியின் பார்வையில் சாதாரண மனிதர்களாகிய நம்மால் முடிந்தது: சமூக வலைதளத்திலும் மற்ற இடங்களிலும் சிறிது சிரத்தை பாராமல் இனி THAMIZH என்றே பயன்படுத்துவோம்.
          தமிழ்நாட்டை டமில்நாடு என்றும், தமிழ்மொழியை டமில்மொழி என்றும் உச்சரிக்கும் இந்த உலக மக்களுக்கு முழக்கமிட்டு உரக்கசொல்வொம் 
'நாம் டமிலர் அல்ல, தமிழர்' என்று.

தங்கள் விமர்சனங்களை வரவேற்கிறேன்.

வாழ்க பாரதம்..! வளர்க தமிழ்..!!

- புதுமை வேந்தன்

முதற்பதிவு

இனி(ணை)ய நண்பர்களே,
                                                       வணக்கம்..!

           "வெகுநாட்களாக, என்  மனதில் தோன்றும் எண்ணங்களை மக்களிடம் பகிர்ந்துகொள்ள ஒரு Blog தொடங்கவேண்டும் என்ற ஆசை இருந்தது"  என்று பொய் சொல்ல விரும்பவில்லை. நான் முகநூலிலேயே மிகவும் அரிதாய் பதிவு செய்பவன். ட்விட்டர்- தொடங்கியதோடு சரி. அதன்பின் ஒருமுறையும் உள்நுழைந்ததில்லை. எளிமையாகச் சொல்லப்போனால் சமூகத்தை சிறிது தொலைவிலிருந்தே கவனிப்பவன்.
           என் Blog தொடக்கம் முற்றிலும் எதிர்பாராததே. நேற்று அடித்த மழைச்சாரலில் இன்று பூத்ததே என் வலைப்பூ..! என் நண்பர் ஒருவரின் வலைப்பூவை  படித்தவுடன் அதற்கு பதில் எழுத நினைத்தேன். என் பதில் எழுத எழுத நீட்டித்தது. அப்போது தோன்றியது ஒரு புதிய சிந்தனை..! இவ்வளவு எழுதியதை பதிலாக்குவதற்கு பதில் பதிவாக்கினால் என்ன என்று. இவ்வாறு தோன்றியதே என் "புதிய சிந்தனை..!"
          பிறந்தது புதிய சிந்தனை மட்டும் அல்ல, புதுமை வேந்தனும் தான். வெகுநாட்களாக 'நவீன் ராஜ்' ஆகிய என் பெயரை தூய தமிழில் மொழிபெயர்க்கவேண்டும் என்ற ஆசை இருந்தது. (இது பொய்யல்ல. உண்மை..) எனினும், அதைபற்றி சிந்தித்ததில்லை.. ஆனால் நேற்று அவா அதிகமாகி மூளையின் இரசாயன மாற்றங்களுடன் என் சிந்தனைத் துளிகளின் குவிப்பாய் புது உருவெடுத்து பிறந்தான் புதுமை வேந்தன்; பூத்தது புதிய சிந்தனை..!
          தன் மனதின் கருத்துகளை கிறுக்கல்களாய் பதிவிக்கவிருக்கும் யதார்தவாதியாகிய நான், இதனை எந்தவித மாபெரும் சமூக புரட்சி அல்லது மாற்றத்திற்காகவோ செய்யவில்லை. ஏனெனில், நான் சுவாமி விவேகானந்தரின் "எதுவரை ஆன்மீக புரட்சி ஏற்பட்டு தனி மனிதன் திருந்தவில்லையோ, அதுவரை சமூக புரட்சிகள் பயனற்றதே!" என்ற கருத்தை பின்பற்றுபவன். இதனையே நம் முன்னோர்கள் எளிமையாக "நாயைக் குளிப்பாட்டி நடுவீட்டில் வைத்தாலும், அது வாலைக் குழைத்துக் கொண்டு குப்பைமேட்டுக்குத் தான் போகும்!" என்று கூறியுள்ளது நாம் அனைவரும் அறிந்ததே.
         எந்நேரமும் இணையத்தில் 'யார் என்ன சொல்வான் ? எவனாவது மாட்டுவானா?' என்பதே வேலையாய்க்  காத்திருக்கும் எப்போதும் பணிமிகுதியுடைய(?!) நண்பர்களுக்கு: என் பதிவில் இடம்பெறும் கருத்துகளுக்கு நான் மட்டுமே பொறுப்பல்ல. என்னை அவ்வாறு  சிந்திக்கவைத்த சமூகமும் சூழல்களும் காரணங்கள் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
       மற்றவகையில், என் சிந்தனைகளை மக்களுடன் பகிர்வதில் மிக்க மகிழ்ச்சி. எண்ணங்களை தமிழில் எளிமையாக எழுத வழிவகுத்த Bloggerக்கு நன்றி.

"என் வலைப்பூவில் தேனருந்த வாருங்கள்..! 
அதன் மணம் பரப்பி கனியாய் மாற்றுங்கள்..!" 

தங்கள் விமர்சனங்களை வரவேற்கிறேன்.

வாழ்க பாரதம்..!

- நவீன் ராஜ்                             
(இனி, புதுமை வேந்தன்)